ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய எலன்ட்ரா
பல்வேறு சிறப்பு வசதிகளுடன் வந்திருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைப்பதோடு, புதிய எலன்ட்ரா மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களிலும் கிடைக்கும். சென்னையில் ரூ.15.24 லட்சம் முதல் ரூ. 19.25 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் எலன்ட்ராவின் முக்கிய சிறப்பம்சங்களை கீழே காணலாம்
இம்பேக்ட் சென்சிங் டோர் லாக்ஸ்: இது மிகவும் முக்கியமான பாதுகாப்பு வசதி. ஒரு வேளை கார் விபத்தில் சிக்கினால், அதிர்வுகளை உணர்ந்து காரின் கதவுகள் தானாக திறந்து கொள்ளும் தொழில்நுட்பம்தான் இது. சென்சார் உதவியுடன் இயங்குகிறது.
டூவல் ஸோன் ஏசி: டூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி வெளியில் எத்தகைய தட்பவெப்பம் நிலவினாலும் காருக்குள் சீரான குளிர்ச்சியை வழங்கும். ஏசியை கூட்டவோ, குறைக்கவோ தேவையில்லை. இதனால், பயணத்தின்போது சிறந்த அனுபவத்தை பெற முடியும்.
கிளவ் பாக்ஸ் கூலர்: எலன்ட்ரா கிளவ் பாக்ஸ் கூலர் வசதியை கொண்டிருக்கிறது. குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை கிளவ் பாக்சில் வைத்துக்கொண்டால் ஃபிரிட்ஜில் வைத்தது போன்று சில்லென்று இருக்கும். சென்னை போன்ற நகரங்களுக்கு அவசியமான வசதி.
ஸ்டீயரிங்கில் கன்ட்ரோல் ஸ்விட்சுகள்: டிரைவிங்கின்போது கன்ட்ரோல் ஸ்விட்சுகளை தேடாமலும், தாவி பிடிக்காத வகையிலும் ஸ்டீயரிங் வீலில் பல கன்ட்ரோல் ஸ்விட்சுகள் பொருத்தப்பட்டுள்ளன. குரூஸ் கன்ட்ரோல், ஆடியோ கன்ட்ரோல் உள்ளிட்ட ஸ்விட்சுகள் ஸ்டீயரிங் வீலில் பொருத்தப்பட்டுள்ளதால் டிரைவிங்கின்போது கூடுதல் வசதியை தரும்.
ஸ்மார்ட் கீ மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்: வெர்னாவை தொடர்ந்து எலன்ட்ராவிலும் இந்த வசதி வந்திருக்கிறது. பாக்கெட்டில் சாவி இருந்தால் போதும் காரை ஒரு பட்டனை அழுத்தி ஸ்டார்ட் செய்யலாம். இதேபோன்று, கதவை மூடுவது, திறப்பதற்கும் இந்த ஸ்மார்ட் கீ சிஸ்டம் உதவும்.
பவர் அட்ஜெஸ்டபிள் டிரைவர் இருக்கை: எந்த உயரம் கொண்டவராயினும் சிறப்பாக அமர்ந்து டிரைவிங் செய்யும் வகையில் 10 வே அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் இருக்கையை கொண்டிருக்கிறது எலன்ட்ரா.
இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் விஎஸ்எம்: அவசரத்திலும், பதட்டத்திலும் அளவுக்கு மீறி பிரேக்கை அழுத்திவிட்டாலும் இந்த தொழில்நுட்பம் காரின் வீல்களுக்கு சரிசமமான பவரை செலுத்தி காரை அழகாக நிறுத்திவிடும். மேலும், கார் கவிழாமலும் பார்த்துக் கொள்ளும். மேலும், இந்த தொழில்நுட்பத்துடன் தற்போது விஎஸ்எம் எனப்படும் தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து செயல்படும். பதட்டத்தில் பவர் ஸ்டீயரிங்கை ஒரே பக்கத்தில் அதிக அளவு திருப்பினாலும், சரியான பவரை செலுத்தும்.
ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்: இருளான பகுதிகளில் செல்லும்போதோ அல்லது போதிய வெளிச்சம் இல்லாதபோது தானியங்கி முறையில் ஹெட்லைட்டுகள் ஒளிரும். சில சமயம் பார்க்கிங் பகுதிகளுக்குள் செல்லும் போது வெளிச்சம் குறைவாக இருந்தால் ஹெட்லைட்டை நாம் ஆன் செய்ய வேண்டியதில்லை. தானாக எரியும் என்பதால் காரை கவனமாக பார்த்து ஓட்ட முடியும்.
சிலிக்கா டயர்ஸ்: சமநிலையுடன் கார் செல்வதற்கும், எந்த சாலை நிலையிலும் அதிக கிரிப்புடன் எளிதாக திரும்பும் வகையிலும், சிறந்த தொழில்நுட்பம் கொண்ட சிலிக்கா டயர்ஸ் எலன்ட்ராவில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டயர்கள் சறுக்கல்களை தவிர்த்து சிறந்த கையாளுமையை வழங்கும். இதை விட இந்த டயர்கள் அதிக மைலேஜையும் கொடுக்க துணை புரியும்.
பார்க்கிங் சென்சார்: ரிவர்ஸ் கேமரா போன்று பார்க்கிங் செய்ய உதவிபுரியும் மற்றொரு சிறப்பு வசதி இது. பார்க்கிங் செய்யும்போது பின்னால் ஏதாவது பொருட்களுக்கு அருகில் கார் செல்லும்போது பீப் ஒலி எழுப்பி டிரைவரை எச்சரிக்கும்.
ரியர் ஏசி வென்ட்: பின் வரிசையில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் நிறைவான குளிர்ச்சியை வழங்கும் வகையில் தனி ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், உடனடி குளிர்ச்சியை பின் வரிசையில் பயணிப்போர் பெற முடியும்.
கியர் ஷிப்ட் இண்டிகேட்டர்: அதிக மைலேஜ் கிடைக்கவும், சிறப்பான பர்ஃபார்மென்சை எஞ்சின் வழங்கவும் எந்த நேரத்தில் கியரை மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கும் கியர் ஷிப்ட் இண்டிகேட்டர் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பின் இருக்கையிலும் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்ச்: எலன்ட்ராவின் குறிப்பிட்டு கூற வேண்டிய வசதிகளில் பின் இருக்கையின் ஆர்ம் ரெஸ்ட்டில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்ச் இருப்பதை கூறலாம். இதனால், டிரைவரை தொந்தரவு செய்யாமல் ஆடியோ சிஸ்டத்தின் வால்யூமை கூட்டவோ குறைக்கவோ முடியும்.
ரியர் பார்க்கிங் கேமரா: ரிவர்ஸ் எடுக்கும்போதோ அல்லது பார்க்கிங் செய்யும்போதோ பின்னால் கழுத்தை திருப்பி பார்க்க அவசியமில்லை. டிரைவருக்கு மேலே கண்ணாடியில் இருக்கும் திரையை பார்த்துக் கொண்டே காருக்கு பின்னால் இருக்கும் பொருட்களை பார்த்து அழகாக ரிவர்ஸ் எடுக்க முடியும்.
ஹில் அசிஸ்ட்: மலை மற்றும் சரிவான சாலையில் செல்லும்போது மிகவும் பாதுகாப்பான டிரைவிங்கை ஹில் அசிஸ்ட் வழங்கும். மலைப் பாதையில் மேலை ஏறும்போது காரை நிறுத்தி எடுக்க நேர்ந்தால் ஹில் அசிஸ்ட் கார் பின்னோக்கி செல்வதை தடுக்கும். இதேபோன்று, சரிவான பாதையில் இறங்கும்போதும் ஹில் அசிஸ்ட் சீராக கார் இறங்குவதற்கு உதவும்.
ஹீட்டடு ரியர் வியூ மிரர்: பின்புறம் வரும் வாகனங்களை பார்ப்பதற்கு பயன்படும் ரியர் வியூ மிரர் எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் வசதி கொண்டதுடன், இந்த கண்ணாடியை வெப்பப்படுத்த முடியும். இதனால், மழை மற்றும் பனிப் பொழிவு காலங்களில் கண்ணாடியில் ஆவி அல்லது தண்ணீர் படர்ந்திருப்பது சுத்தமாகி விடும் என்பதால் தெள்ளத் தெளிவாக பின்புறம் பார்த்து ஓட்ட முடியும்.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.