புகை நமக்கு பகை, புகை பிடிக்காதீர் என்ற வாசகங்களை நாம் பார்த்தும், கேட்டும் இருப்போம். இவைகள் இன்று விளம்பரபப் பலகைகளில்தான் உள்ளது. அரசும், புகைப்பிடிப்பதால் உண்டாகும் பாதிப்புகள் பற்றி பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், இந்தியாவில் புகைப்பதால் ஆண்டுக்கு 14 இலட்சம் பேர் இறக்கின்றனர். 60 இலட்சம் பேர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி தவிக்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், புகை பிடிப்பவர்களை விட, புகை பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதியை புகை பிடிப்பு எதிர்ப்பு தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஆனாலும், புகைப் பிடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக டீன் ஏஜ் வயது ஆண்களையும், பெண்களையும் புகைப்பழக்கம் அதிகம் ஈர்ப்பதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிகரெட், பீடி, புகையிலை வழங்கக்கூடாது என அரசு எச்சரித்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக் கிடையே இப்பழக்கம் விரைவாக பரவி வருவது கவலை அளிக்கும் விசயமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தெரிந்தோ தெரியாமலோ சில தீய பழக்கங்களுக்கு அடிமையாகி உடலைக் கெடுத்து நோயின் பிடியில் சிக்கி இறுதியில் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.
ஒருசிகரெட்டைப் புகைத்தால் அவருக்கு மரணம் 5.5 நிமிடம் முன்னோக்கி வருகிறது, அதைவிட அருகில் உள்ளவர்களுக்கு 7 நிமிடம் முன்னோக்கி வருகிறது என யூனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்தகைய கொடூரம் வாய்ந்த மெல்லக் கொல்லும் புகைப்பழக்கதால் உடலில் என்ன என்ன பாதிப்புகள் உண்டாகும் என்பதை சற்று கவனியுங்கள்.
முதலில் புகையிலையில் உள்ள நச்சுப் பொருட்களைப் பார்ப்போம்.
நிகோடின் , கார்பன்-டை-ஆக்ஸைடு, பிரிடின் பைரின், கார்பன் மோனாக்ஸைடு, அமோனியா ஆர்செனிக், மீத்தேன், பிரஸ்லிக் அமிலம், பார்மிக் அமிலம், கிரிஸால், பைரால், ரூபிடின், மெதிலின் பர்பரோல், பைக்கோலின், பார்வோலின், ஒட்டிடைப், சல்புரேடட் ஹைடிரஜன், சப்பரிடேட், லுனைன், விரிடைன், மைதிலைமின், பார்மால் டிரையுட், பார்பிக் ஆல்டிஹைட், வெடியுப்பு, மரிஜீவானா, அக்ரோலின், மார்ங்காஸ், கொரிடீன்,
இவை அனைத்துமே கொடிய நச்சுப் பொருட்கள். இவையா புண்பட்ட மனதை ஆற்றும்..
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் புகைப்பிடிக்கும் அன்பர்கள்.
புகைப்பிடிப்பதால் உண்டாகும் பாதிப்புகள்
சுவாசக் குழாயில் சளி ஏற்பட்டு இருமல் தோன்றும். தொண்டைக்கட்டு ஏற்படும். மூச்சுக் குழல்களில் புண்கள் உண்டாகும். நுரையீரல் சளி கோர்த்துக்கொள்ளும்.
குடற்புண் (அல்சர்) உண்டாகும். வாய்ப்புண் ஏற்படும். தொண்டை எரிச்சல் ஏற்படும். நாக்கு சுவையின்மை உண்டாகும். பற்கள் பலமிழக்கும். பல் ஈறு சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.
தொடர்ந்து இருமல், களைப்பு உண்டாகும். மூக்கடைப்பு அதனைத் தொடர்ந்து ஈளை, ஆஸ்துமா போன்றவை ஏற்படும்.
நுரையீரலில் சளி கட்டி இறுதியில் புற்றுநோயின் பாதிப்பை உண்டாக்கும்.
காச நோயை உண்டாக்கும். கண் பார்வை மங்கும். கண் புகைச்சல், கண் எரிச்சல், கண் காசம் போன்றவை உண்டாகும். கண் நரம்புகளில் சளி கோர்த்து வறட்சி உண்டாகும்.
இரத்தத்தில் ஆக்ஸிஜன் (பிராணவாயு) அளவைக் குறைப்பதால் இரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரும்புச்சத்து குறைந்து போய்விடுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பு இரத்த நாளங்களில் உட்புறத்தில் இரத்தத்தை கடினப்படுத்தி அதாவது பசைத் தன்மையடையச் செய்து இரத்த நாளங்களில் ஒட்டிக்கொண்டு இரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது. இதனால் அதிக இரத்த அழுத்த நோய் ஏற்பட்டு பின் இதய நோய் உண்டாகி மாரடைப்பு உண்டாகிறது.
கல்லீரல் பாதிக்கப்பட்டு அதனால் காமாலைநோய் உண்டாக்கவும் செய்யும் தன்மை சிகரெட்டிற்கு உண்டு.
ஞாபக சக்தியைக் குறைக்கும். மூளை பாதிப்பை உண்டாக்கும். ஆண்மையிழப்பு, மலட்டுத்தன்மை, தோல் சுருக்கம், கை, கால் நடுக்கம் ஏன்றவற்றை ஏற்படுத்தும்.
பணம் விரையத்துடன் இப்படி உடலைக் கெடுக்கும்புகையிலை புகைக்க வேண்டுமா. சற்று சிந்தியுங்கள்.
புகைபிடிப்பதைத் தடுக்க சில யோசனைகள்
உங்கள் பொருளாதாரத்தையும், நீங்கள் புகை பிடிப்பதால் உங்களுக்கும் உங்களைச் சுற்றியிருக்கும் உங்கள் உறவுகளுக்கும் எத்தகைய பாதிப்புகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதை உணருங்கள்.
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்ற பழமொழியை நினைத்து சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை தள்ளிப்போடுங்கள். புகைப்பிடிக்கும் நண்பர்களைக் கொஞ்சம் தவிருங்கள்.
புகைப்பிடிக்கும் எண்ணம் தோன்றினால் காய்கறி சாலட் சாப்பிடுங்கள். காரட், வெள்ளரி, வெங்காயம் சாப்பிடலாம். பழங்களைச் சாப்பிடுங்கள். சாப்பிட முடியாதவர்கள் நன்கு தண்ணீர் அருந்துங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக என்னால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என எண்ணிவிட்டால் சிகரெட்டையா விட முடியாது.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.