தினசரி மூன்று கதலி வாழைப்பழங்களை (Banana)சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
காலை உணவுக்குப் பின் ஒன்றும், பகல் உணவுக்குப் பின் ஒன்றும் பின்னர் மாலை வேளையில் ஒன்றுமாகச் சாப்படுவது நல்லது என்றும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
இது உடலுக்குத் தேவையான பொட்டாஸியத்தை வழங்குகின்றது. அதன்மூலம் மூளையில் இரத்தக் கட்டுக்கள் ஏற்படுவது 21 விழுக்காடு தடுக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆய்வாளர்களே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
பசளிக் கீரை, விதைவகைகள், பால், மீன், பருப்பு வகைகள் போன்ற பொட்டாஸிய உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதற்கு முந்தைய சில ஆய்வுகளிலும் வாழைப்பழங்கள் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி பக்கவாதத்தை தடுக்கக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1960ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி முதல் நடத்தப்பட்ட 11 வெவ்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
தினசரி உணவில் 1600 மில்லி கிராம் பொட்டஸியத்தைச் சேர்த்துக் கொண்டாலே போதுமானது என்றும் அமெரிக்க இதய நோய்கள் கல்லூரியின் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழைப்பழத்தில் சராசரியாக 500 மில்லி கிராம் பொட்டாஸியம் அடங்கியுள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி உடம்பின் நீர்த்தன்மை சமநிலையையும் பேணுகின்றதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.