Sunday, December 30, 2012

யூஸ்டு கார் வாங்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

 

புதிய காரை கூட எளிதாக தேர்வு செய்து வாங்கிவிடலாம். ஆனால், பயன்படுத்தப்பட்ட கார் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பலருக்கு பட்ஜெட், முதல்முறையாக யூஸ்டு கார் வாங்கி ஓட்டி பழகிய பின்னர் புதிய கார் வாங்கலாம் என்ற முடிவில் வாங்கிவிடுவர். அதன்பின்னர், ஏற்படும் கசப்பான அனுபவங்களால் பயன்படுத்தப்பட்ட காரை ஏன் வாங்கினோம் என்று புலம்புவதை கண்கூடாக பார்த்திருக்கிறோம். ஆனால், தற்போது இளைய தலைமுறை வாடிக்கையாளர்கள் 3 முதல் 5 ஆண்டுகளில் பழைய காரை மாற்றி புதிய கார் வாங்குவதால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் சிறந்த கார்கள் கிடைக்கின்றன. எனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் வைத்தால் இதுபோன்ற கசப்பான அனுபவங்களை தவிர்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் செய்தித் தொகுப்பை வழங்குகிறோம்.

 

பட்ஜெட் & கார் தேர்வு:

பயன்படுத்தப்பட்ட காரை வாங்க முடிவு செய்தபின், பட்ஜெட்டிற்கும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் தகுந்த மாடலை தேர்வு செய்வது மிக மிக முக்கியம். 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஹேட்ச்பேக் கார் போதுமானது. அதிக குடும்ப உறுப்பினர்கள் கொண்டவர்களுக்கு எஸ்யூவி அல்லது எம்பிவி கார் மாடல்கள் பொருத்தமாக இருக்கும். அடிக்கடி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் டிக்கி வசதி கொண்ட செடன் ரக கார்களை தேர்வு செய்யலாம்.

 மார்க்கெட் நிலவரம்:

நாம் வாங்குவதற்கு தேர்வு செய்துள்ள சில மாடல்களின் மார்க்கெட் விலை நிலவரத்தை தெரிந்து கொண்டு, செல்வதும் அவசியம். காரை தேர்வு செய்யும்போது அதன் விலையை மார்க்கெட் நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஆன்லைனில் இந்த விபரங்களை எளிதாக பெறும் வாய்ப்பு இருக்கிறது.

விற்பனையாளர் தேர்வு:

பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும்போது மோசடிகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே,நல்ல அறிமுகமான விற்பனையாளர் அல்லது மார்க்கெட்டில் நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் நம்பகமான விற்பனையாளரை தேர்வு செய்வது உத்தமம். மாருதி,ஹூண்டாய் போன்ற முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகின்றன. இந்த நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவது பாதுகாப்பானது.மேலும்,பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு சில நிறுவனங்கள் வாரண்டியும் தருகின்றன.

பைனான்ஸ்:

பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு பல முன்னணி பைனான்ஸ் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு கடனுதவி அளிக்கின்றன. காருக்கு கடன் வாங்கும் முன் பைனான்ஸ் நிறுவனங்களின் வட்டிவிகிதங்கள், டாக்குமெண்ட் கட்டணங்கள் உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொண்டு,அதில் உங்களுக்கு பொருத்தமான கடன் திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.

டெஸ்ட் டிரைவ்:

விற்பனையாளிரிடம் உள்ள கார்களில் உங்களுக்கு பொருத்தமான காரை தேர்வு செய்தவுடன்,அதை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும். உங்களுக்கு கார் ஓட்டிய அனுபவம் இல்லையென்றால் கூட வரும் நண்பர்கள் மற்றும் தெரிந்த மெக்கானிக்குகள் மூலமாக காரை டெஸ்ட் டிரைவ் செய்து காரின் கன்டிஷனை தெரிந்து கொள்ளலாம். தவிர, கார் எத்தனை கி.மீ.,தூரம் ஓடியிருக்கிறது, பாகங்களின் தேய்மானம், விபத்துக்களில் சிக்கிய காரா என்பது உள்ளிட்ட விபரங்களை கண்டிப்பாக அறிந்த பின்னரே வாங்க வேண்டும். முடிந்தால் உங்கள் குடும்பத்தினரை அதில் உட்கார வைத்து வசதியாக இருக்கிறதா என்பதையும் பார்த்துவிடுங்கள்.

காரின் ஜாதகம்:

காரை தேர்வு செய்தபின், அதன் பதிவு புத்தகம் (ஆர்.சி.,புக்), சாலை வரி செலுத்தியதற்கான ரசீது, இன்ஷ்யூரன்ஸ், ஒரிஜினல் இன்வாய்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கவனமாக சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது. கார் கடனில் வாங்கப்பட்டிருந்தால், கடன் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு விட்டதா அல்லது தவணை பாக்கி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதன் விபரங்கள் ஒரிஜினல் ஆர்.சி.,புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஹைப்போத்திகேஷன் நீக்கம்:

ஒருவேளை கடன் கட்டி முடிக்கப்பட்டு, ஆர்.சி., புத்தகத்தில் ஹைப்போத்திகேஷன் என்று குறிப்பிடப்பட்டிருந்தால், விற்பனையாளரிடம் என்ஓசி., சான்றை வைத்து ஆர்.டி.ஒ., அலுவலகத்திலிருந்து ஹைப்போத்திகேஷனை நீக்கி தர சொல்லுங்கள். ஆர்.சி.,புத்தகத்தில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும், காரில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும் ஒன்றாக உள்ளதா என்று சோதித்து பார்க்க வேண்டும்.

காரின் வரலாறு:

பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில், திருட்டு கார்களை விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, காரின் சர்வீஸ் புத்தகம், டயர் தயாரிப்பு தேதிகள் உள்ளிட்டவற்றை வைத்து வரலாறை கண்டுபிடித்து விடலாம். காரை பற்றிய அனைத்து விபரங்களும் உங்களுக்கு தெரியவில்லையென்றால், நம்பிக்கையான, நன்கு அறிமுகமான மெக்கானிக்கை அழைத்து செல்லுங்கள். அவரை வைத்து மேற்கூறிய அனைத்து விபரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

கார் டீல்:

காரின் கண்டிஷன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் திருப்தி ஏற்பட்டு, காரை வாங்க முடிவு செயதபின் விற்பனையாளிரிடம் கார் விலை பற்றி பேரம் பேசுங்கள். காரின் கண்டிஷன் நன்றாக இருந்தால், உங்கள் பட்ஜெட்டைவிட சில ஆயிரங்கள் கூடுதலாக இருந்தாலும் யோசிக்க வேண்டாம்.

பெயர் மாற்றம்:

காரை வாங்கும்போதே அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் கையோடு வாங்கி விடுங்கள். மேலும், பழைய உரிமையாளரிடமிருந்து, உங்கள் பெயருக்கு பதிவை மாற்றும் பார்ம்-29, காரை விற்பனை செய்தது மற்றும் வாங்கியதற்கான அத்தாட்சியான பார்ம்-30 ஆகிய ஆவணங்களில் கையெழுத்திட்டு கையோடு வாங்கி கொள்ளுங்கள். பின்வரும் http://www.tn.gov.in/sta/ApplicationForms.html என்ற இணையதள முகவரியிலிருந்து மேற்கண்ட விண்ணப்பங்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

யூஸ்டு கார் செக்கப்:

யூஸ்டு காரை எவ்வாறு ஆய்வு செய்வது என்பது குறித்த சிம்பிளான டிப்ஸ் செய்தித் தொகுப்பை காண்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.